சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனை அறிவித்தார்.
நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் தொழில்நுட்ப ஆற்றல்களை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புச் சவால்களுக்குத் தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ள இந்த மையத்திற்கான அமைச்சரவை ஒப்புதல் அடுத்த வாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 17,000 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டதாரிகளாக வெளிவந்தபோதிலும், அவர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது பட்டதாரிகளிடம் இடைநிலை அளவிலான திறன்களே காணப்படுகின்றன. ஆனால், வேலைவாய்ப்புகள் உயர் தொழில்நுட்பத் துறைகளிலேயே அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதே தற்போதைய பிரதான தேவையாகும்.
செயற்கை நுண்ணறிவு (AI), பெருந்தரவு (Big Data), குவாண்டம் கணினியியல் (Quantum Computing) மற்றும் தொடர் தொகுதித் தொழில்நுட்பம் (Blockchain) போன்ற அதிநவீன தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி முறைகள் தரமுயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பி.பி.ஓ (BPO) நிறுவனங்கள் மற்றும் தொலைதூர வேலைவாய்ப்பு (Remote Work) கட்டமைப்புகள் மூலம் இலங்கை பட்டதாரிகளுக்குச் சர்வதேச அளவிலான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.