விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (19) பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ‘கறுப்புக் கொடி’ ஏந்திய போராட்டம் தொடர்பாக, யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CID) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் மாணவர் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் மீதான பொலிஸ் விசாரணைகள் நிறுத்தப்பட்டு, அவை பல்கலைக்கழக நிர்வாக மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடாது.
இன்றைய தினம் அனைத்து விரிவுரைகளையும் புறக்கணித்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலை மூடி அதன் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
விசாரைணக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ள எமது மாணவர்கள் திரும்பி வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல்கலைக்கழகப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மாணவர்களின் இந்த ஜனநாயகப் போராட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.