வாழ்க்கை செலவை குறைப்பதை (Affordability) மையமாகக் கொண்டு பிரசாரம் மேற்கொண்ட ஒலிவியா சௌ (Olivia Chow), மீண்டும் டொராண்டோவின் மேயராக இரண்டாவது முறைக் பதவிக் காலத்தைக் கைப்பற்றியுள்ளார்.
99.2 சதவீத வாக்குப்பதிவு மையங்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஒலிவியா சௌ 54.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford) 41.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒலிவியா சௌ தோராயமாக 127,627 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
“டொராண்டோ மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்,” என்று திங்கள்கிழமை இரவு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒலிவியா சௌ கூறினார். “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், மற்றும் டொராண்டோவைத் தங்கள் வீடாகக் கருதி இங்கு உழைத்து வாழும் அனைவருக்கும் நான் கூறுகிறேன்; நான் உங்கள் அனைவருக்கும் மேயர்.”
வாழ்க்கை செலவை குறைப்பதை மையமாகக் கொண்ட பிரசாரம்
ஒலிவியா சௌ தனது பிரசாரத்தின் போது பொதுப்போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தாமல் நிறுத்தி வைப்பதாகவும், வாரத்திற்கு 10 முறை கட்டணம் செலுத்திப் பயணித்த பிறகு பயணங்களை இலவசமாக்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மேலும், பள்ளி ஊட்டச்சத்து திட்டத்தை விரிவாக்கி மதிய உணவையும் சேர்ப்பதாக உறுதியளித்தார். இதன் மூலம் குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்கான செலவில் சுமார் $880 டாலர்களைச் சேமிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சொத்து வரியை (Property Tax) பணவீக்க விகிதத்திற்கு ஏற்பவே உயர்த்துவதாகக் கூறிய சௌ, பிராட்ஃபோர்ட்டின் வரி முடக்கத் திட்டம் நீண்ட காலத்தில் நகர மக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
தோல்வியை ஒப்புக்கொண்ட பிராட் பிராட்ஃபோர்ட்
தனது தோல்வியை ஒப்புக்கொண்ட பிராட்ஃபோர்ட், ஒலிவியா சௌவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார்.
“டொராண்டோ மக்கள் தங்கள் முடிவை அறிவித்துவிட்டார்கள். ஒலிவியா சௌ மீண்டும் மேயர் அலுவலகத்திற்குத் திரும்புவார் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரே இந்த நகரத்தின் மேயர், அதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று பிராட்ஃபோர்ட் கூறினார்.
முழுமையான பதவிக்காலம்
2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மேயரான ஒலிவியா சௌவுக்கு, இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக 4 ஆண்டுகள் கொண்ட முழுமையான பதவிக்காலம் கிடைத்துள்ளது