லெபனானில் தனது தரைவழி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பிறகு இதுவரை இல்லாத அளவிலான “மிகப்பெரிய தாக்குதல்களை” முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து லெபனானின் பல்வேறு நகரங்கள் மற்றும் பட்டணங்களில் மிகக் கடுமையான குண்டுவீச்சுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரே நேரத்தில் வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான சுமார் 100 தலைமையகங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் அவிச்சே அத்ரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஜெனரல் இயல் ஜமீர் “கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். எமது இந்தத் தாக்குதல்கள் நிறுத்தமின்றித் தொடரும்இ” என்று குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் ஊடகங்களின்படி இந்தத் தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவலாக நடத்தப்படுவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது
இஸ்ரேலிய விமானப்படை நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து லெபனான் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் திணறி வருவதுடன் இடிந்து விழுந்த கட்டிடங்களின் சிதைவுகளுக்கு அடியில் பலர் சிக்குண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் தெற்கு லெபனான் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பெக்கா பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனான் மோதலுக்கும் பொருந்தும் என இதனை மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால் அந்தத் தகவலை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.