லண்டனில் நான்காவது முறையாக Centurion Staunch Nexus அமைப்பினால் நடத்தப்பட்ட Asian Influencers Awards 2026 விருது வழங்கும் விழா, கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை, லண்டன் ஹீத்ரோவில் அமைந்துள்ள Radisson Blu ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, சமூக மற்றும் ஊடகத் தளங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஆளுமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் சாதனைகளையும் சமூகப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் நோக்கில் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதான ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் தனித்துவமான பங்களிப்புகளை வழங்கி, மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவரும் ஆளுமைகள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பாக, Fashion & Lifestyle, Entertainment & Arts, Food & Travel, Business & Professional, Health & Wellbeing, Content Creators மற்றும் Community Impact உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விருது விழாவில், தமிழ் மக்கள் மத்தியில் ‘சதீஷ்’ என அறியப்படும் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி சதீஷன், ‘Community Impact Influencer’ விருதை வென்றுள்ளார்.
ஈழத்தமிழரான சதீஷ், ஊடகத்துறையில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவர் என்பதுடன்; அரசியல், சமூகம் மற்றும் கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளின் ஊடாகத் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர்.
2008ஆம் ஆண்டு இலங்கையின் வெற்றி எஃப்.எம். வானொலியில் அறிவிப்பாளராகத் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த சதீஷ், பின்னர் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான ‘Shakthi the Debater’ நிகழ்ச்சியின் முதலாவது தொடரின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
பின்னர் புலம்பெயர்ந்து லண்டனில் குடியேறிய அவர், அங்கு இயங்கிவந்த ILC தமிழ் வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்துvIBC தமிழ் ஊடக நிறுவனத்தில் வானொலிப் பிரிவின் தலைமைப் பொறுப்பையும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பொறுப்புகளையும் வகித்திருந்தார்.
குறிப்பாக, அவர் வானொலியில் தொகுத்து வழங்கிய ‘மனங்கள் பேசட்டும்’ நிகழ்ச்சி, சமூகத்தில் வெளிப்படையாகப் பேசத் தயங்கப்படும் பல்வேறு விடயங்களை விவாதத்திற்கு உட்படுத்தியதன் மூலம் கவனம் பெற்றிருந்தது.
அதேபோன்று, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அவர் நெறிப்படுத்திய அரசியல் நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் பல்வேறு விவாதங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தன.
புலம்பெயர் தேசங்களில் இயங்கும் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒருபுறமும், இலங்கை மற்றும் இந்திய அரசியல்வாதிகள் மறுபுறமும் எனப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் நேர்காணல்களையும் உள்ளடக்கி அவர் தயாரித்து நெறிப்படுத்திய ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி, அக்காலப்பகுதியில் தமிழ் அரசியல் பரப்பில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ‘வெற்றித் தமிழா’ (Vettri Thamizha) என்ற பெயரில் தனது சொந்த YouTube மற்றும் டிஜிட்டல் ஊடகத் தளத்தை நடத்தி வருகின்றார்.
இதனூடாக அரசியல், சமூகம், கலை மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விடயங்களைத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.