யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபன் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகளும் மருமகனும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இப்படுகொலை தொடர்பான முறையான மரண விசாரணைகளை (Inquest) எதிர்வரும் மே மாதம் 20-ஆம் திகதி முன்னெடுக்க நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கின் சான்றுப் பொருட்களாகக் காவற்துறையினரால் மீட்கப்பட்டிருந்த மறைந்த விரிவுரையாளரின் தங்க நகைகள் மற்றும் அவருக்குச் சொந்தமான கார் ஆகியவற்றை அவரது மகனிடம் கையளிக்குமாறு மன்று கட்டளையிட்டது.
சந்தேகநபர்களான மகளையும் மருமகனையும் எதிர்வரும் மே மாதம் 14-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த மூத்த விரிவுரையாளரின் படுகொலைச் சம்பவம், கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குடும்பத் தகராறு மற்றும் சொத்துப் பிணக்குகளே இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.