யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடையவர் என்றும், பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது பிடிபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.