675க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்கள் இன்னும் உதவியற்ற நிலையில் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருவதாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் அத்தகைய நடவடிக்கைகளின் மிகவும் மந்தக் கதியில நடைபெறுவதாக, பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடித் தலையீட்டின் கீழ் இந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கை கோருகிறது.
‘டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு’ என்ற தலைப்பில், மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையொப்பம் இடும் செயற்பாடு, 2026 மார்ச் 19 அன்று, கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் எந்தவொரு நிரந்தரத் தீர்வுமின்றி பாடசாலைகள், தற்காலிக முகாம்கள், கூடாரங்கள் மற்றும் பழைய பாழடைந்த தோட்டக் கட்டிடங்களில் இன்னும் வசித்து வருவதாகவும், பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தாலும், அந்த வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பற்றவை என அவர்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்திற்கான காணிகள் விடுவிப்பது குறித்து இன்னும் தெளிவில்லாத தன்மை காணப்படுவதாகவும், அரசாங்கம் அறிவித்த நிவாரணங்களைப் பெறுவதில் காணி உரிமையற்ற மலையகத் தமிழ் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.