மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்புச் செயல் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“சட்டம் அனைவருக்கும் சமமானது” என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி அரச நிறுவனங்கள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி, சுகாதாரத் துறையினரும் முப்படையினரும் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நகர சபைப் பிரிவில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில், பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை புதன்கிழமை (15) காலை மன்னாரில் ஆரம்பித்து வைத்தனர்.
அரச அலுவலகங்கள், விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது, டெங்கு நுளம்புகள் பெருகக் காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்து, சுகாதாரச் சீர்கேட்டுடன் சூழலை வைத்திருந்த 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.