
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் தாக்கப்படுவது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – பேரலபனதார, தண்டேனியகந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சொத்து திருட்டு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் கடந்த ஜூன் 3 ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தனது மகன் திருட்டு முறைப்பாட்டை செய்த தரப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் பரவிய காணொளியும் விசாரணைகளுக்கான முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள், முதன்மை முறைப்பாட்டாளரான 40 வயதுடைய பெண், அவரது 47 வயது கணவர், 19 வயது மகன் மற்றும் 17 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் காலி, மிலித்துவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சிறுவன் மீதான திருட்டு குற்றச்சாட்டு மற்றும் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஆகிய இரண்டையும் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.