மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கை யின்போது 23பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மட்டக்களப்பு நகரின் முக்கிய சந்திகளில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதிகளில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சாரதிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதற்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் நடமாடும் மருத்துவப் பரிசோதனைப் பேருந்து மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையம் மற்றும் ஏறாவூர்,காத்தான்குடி,வாழைச்சேனை ஆகிய பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், வேன் சாரதிகள், கனரக வாகன சாரதிகள், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன சாரதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.தீவுகள் ஆராயுங்கள்
இன்றைய தினம் குறித்த பகுதிகளில் 141 வாகனங்கள் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டதுடன் அவற்றில் 23பேர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனங்களை செலுத்தியமை கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.