மட்டக்களப்பு நகர் பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் மயக்க மருந்துகளுடன் ஓட்டோ ஓட்டுநர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மயக்க மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி மூலம் ஏற்றப்படும் திரவ மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த ஓட்டோ ஓட்டுநர் நீண்டகாலமாக இளைஞர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாறான போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் அண்மையில் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற சில திருட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.