“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?,” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும் இந்த மசோதா மீதான திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற உறுப்பினராகவோ, திமுகவின் பிரதிநிதியாகவோ நான் இங்கு நிற்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் 8 கோடி மக்கள் சார்பாக நான் இங்கு நிற்கிறேன். தமிழ்நாடு தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை வாக்குப்பதிவுக்குப் பிறகு தாக்கல் செய்யலாம் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தமிழகத்தின் குரல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும் தமிழகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது.