சென்னை:
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் என்று கற்பனையாகச் சொல்லி வருவதாகவும், எத்தனை முறை தோற்றாலும் எவனிடமும் போய் நின்று ஆதரவு கேட்க மாட்டேன் என்றும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் எதிர்பார்ப்பு:
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான த.வெ.க வெற்றி பெற்றதன் மூலம், சட்டமன்றத்தில் அதன் பலம் 107-இல் இருந்து 109 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் குறித்த விவாதங்கள்:
முன்னதாக, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பசியில் இருக்கும்போது பிரியாணி தருகிறேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வோம் என சீமான் பதிலளித்திருந்தார். இதனால், கடலூர் (2016), திருவொற்றியூர் (2021) மற்றும் காரைக்குடி தொகுதிகளில் தோல்வியடைந்த சீமான், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, “தேர்தல் அறிவிக்கட்டும், அதன்பிறகு பேசலாம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதே சமயம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்துக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
நெல்லையில் சீமான் விளக்கம்:
இத்தகைய சூழலில், நெல்லையில் இன்று பேசிய சீமான், “இனி எதுவும் பேசுவதில்லை; செயல்தான். இனி செயல் மட்டுமே நமது அடையாளம். எவ்வளவு பெரிய கோட்டையானாலும் சின்ன சாவித் துவாரத்தில்தான் திறக்கும். நமது கோட்டையை அம்பாசமுத்திரத்தில் இருந்துதான் திறக்கிறோம். சீமான் பொது வேட்பாளர் எனக் கற்பனையாகச் சொல்லி வருகிறார்கள். எத்தனை முறை நான் தோற்றாலும் தோற்பேனே தவிர, எவனிடமும் போய் நின்று என்னை ஆதரி எனக் கேட்க மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
#Seeman #NTK #AmbasamudramByElection #TamilNaduByElections #Tirunelveli #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive