உயர்ந்த தகுதிகளும் திறமைகளும் கொண்ட மனிதவளத்தை கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கடவலவெவ மகா வித்தியாலய மாணவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான எட்டு வகுப்பறைகளை உள்ளடக்கிய இந்த கட்டடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் சுமார் 55 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், அறிவும் திறன்களும் நற்பண்புகளும் நிறைந்த முழுமையான குடிமக்களை நாட்டிற்கு வழங்குவதாகும் எனக் குறிப்பிட்டார்.
குழந்தைகளை தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்துவதோடு அரசாங்கத்தின் இலக்கு முடிந்துவிடுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் தங்களது அறிவை நடைமுறைரீதியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்காக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பாடசாலை உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 2027ஆம் ஆண்டில் கல்வி உருமாற்றத்திற்காக கணிசமான முதலீட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக தாமதமடைந்திருந்த ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கல்வி முறையை மேலும் வலுப்படுத்த தகுதி மற்றும் தனிநபர் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி தொடர்பில் தற்போது பெற்றோர் சுமக்கும் பொறுப்பின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், மாணவர்களின் திறமைகளை வளர்த்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குவதே இந்த கல்விச் சீர்திருத்தங்களின் மற்றொரு நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.