பிக்கரிங் நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் அநாகரீகமான செயல்கள் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், பொதுமக்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவையின் (Durham Regional Police Service) தகவல்படி, இந்தச் சம்பவங்கள் ‘த ஷொப்ஸ் அட் பிக்கரிங் சிட்டி சென்டர்’ (The Shops at Pickering City Centre) கடைத்தொகுதிக்குள் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நிகழ்ந்துள்ளன.
கடந்த மார்ச் 26 ஆம் திகதி, சந்தேக நபர் குறித்த கடையின் ஆடை மாற்றும் அறைக்குள் (Changeroom) நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னால் அநாகரீகமான முறையில் தனது உடல் உறுப்புகளைக் காட்டியுள்ளார். பின்னர் ஏப்ரல் 2 ஆம் திகதி மீண்டும் அங்கு வந்த அவர், அங்கிருந்த ஊழியர் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பியோடியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட “குற்றத்தைத் தீர்க்க உதவுங்கள்” (Help Solve a Crime) என்ற பதிவின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நிரந்தர முகவரி ஏதுமற்ற 29 வயதுடைய பிராண்டன் எட்செல் செவில்லா-செலாயா (Brandon Edsel Sevilla-Zelaya) என்பவர் ஏப்ரல் 25 அன்று கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
பாலியல் வன்புணர்வு (Sexual assault)
-
அநாகரீகமான செயல் (Indecent act)
-
5,000 டாலருக்கும் குறைவான பெறுமதியுடைய பொருட்களைத் திருடியமை (3 குற்றச்சாட்டுகள்)
-
நன்னடத்தை விதிகளை மீறியமை (12 குற்றச்சாட்டுகள்)
சந்தேக நபர் பிணை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலதிகமாக யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.