கடந்த ஆண்டு ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் உள்ள பகல்நேர சிறுவர் காப்பகத்திற்குள் எஸ்யூவி (SUV) ரக வாகனம் ஒன்று மோதி, குழந்தை ஒன்று பலியானதுடன் பல சிறுவர்கள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்த சம்பவத்தில், 71 வயதுடைய முதியவர் ஒருவர் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
வினய் குமார் குப்தா (Vinay Kumar Gupta) என்ற அந்த முதியவர், நியூமார்க்கெட் (Newmarket) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ‘ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி மரணத்தை விளைவித்தமை’ மற்றும் ‘ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியமை’ ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
இந்த விபத்து கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ‘ஃபர்ஸ்ட் ரூட்ஸ் ஏர்லி எஜுகேஷன் அகாடமி’ (First Roots Early Education Academy) என்ற காப்பகத்தில் நிகழ்ந்தது. குப்தா தனது பேரக்குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக வாகனத்தை நிறுத்த (Park) முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த எஸ்யூவி வாகனம் நடைபாதையில் ஏறி, ஜன்னலை உடைத்துக்கொண்டு மூன்று வகுப்பறைகளுக்குள் ஊடுருவிச் சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வாகனம் அங்கிருந்த 24 குழந்தைகள் மற்றும் மூன்று ஊழியர்கள் மீது மோதிவிட்டு நின்றது. இதில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாகப் பலியானதுடன், மற்றொரு குழந்தை வாழ்நாளைப் பாதிக்கும் அளவிலான (Life-altering) கடுமையான காயங்களுக்கும், ஏனைய பல குழந்தைகள் பலத்த காயங்களுக்கும் உள்ளாகினர்.
சம்பவ இடத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் வாகனத்தை நிறுத்த பிரேக் (Brake) பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. குப்தா பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக அக்ஸிலரேட்டரை (Accelerator) மிதித்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், விபத்து மீள்வடிவமைப்பு அறிக்கையும் (Collision reconstruction report) இது ஓட்டுநரின் தவறால் ஏற்பட்ட விபத்து என முடிவு செய்துள்ளது.
குப்தாவுக்கான தண்டனை விபரங்களை அறிவிக்கும் நீதிமன்ற விசாரணை வரும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.