சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய், அங்கு கடலில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, ‘வெற்றி வேல்’ பரிசாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் தரிசனத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை சென்னை திரும்பிய விஜய், இன்று (புதன்கிழமை) காலை தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய் பாபாவைத் தரிசிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா செல்லும் அவர், இன்று காலை 10:30 மணியளவில் ஷீரடி கோவிலில் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், விஜய்யின் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணம் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது கட்சியின் வெற்றி மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் சிறக்க வேண்டி அவர் இந்த வழிபாடுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
#ThalapathyVijay #TVK #ShirdiSaiBaba #VijayTempleVisit #TNElection2026 #ThiruchendurMurugan #SpiritualJourney #VijayForCM #BreakingNews #TamilPolitics #Maharashtra #SaiBabaDarshan #Vetrivel #May4 #ElectionResults #VijayFans #TVKNews #April29