மதுரை:
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கை ஜூன் 4-ஆம் தேதி முதல் தினசரி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை முடிவெடுத்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இரட்டை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிறையில் இருந்து காணொலி வாயிலாக ஆஜரான குற்றவாளிகள் 9 பேரும், மேல்முறையீடு செய்யத் தங்களுக்குக் கால அவகாசம் கோரினர். இதில் முதல் குற்றவாளியான ஸ்ரீதர், மனுத் தாக்கல் செய்ய 15 நாட்கள் விடுப்பு கோரிய நிலையில், சிறையிலேயே அதற்கான வசதிகள் இருப்பதால் விடுப்பு வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ஜூன் 1-ஆம் தேதிக்குள் குற்றவாளிகள் அனைவரும் தங்களது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், “தமிழகமே உற்றுநோக்கும் மிக முக்கியமான வழக்கு இது” எனக் குறிப்பிட்டு, ஜூன் 4 முதல் இடைவிடாமல் தினசரி விசாரணை நடைபெறும் என அறிவித்தனர். சிபிஐ தரப்பு மேல்முறையீட்டு மனு நகல்களைக் குற்றவாளிகளுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#SathankulamCase #JayarajPenix #JusticeForJayarajPenix #MaduraiHighCourt #DeathSentence #PoliceCustodyDeath #CBICase #MaduraiNews #BreakingNews #TamilNaduJustice #HumanRights #LawAndOrder #CourtUpdate #SathankulamVerdict #DailyHearing #April30