சென்னை:
நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும், இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் திமுக இன்று அறிவித்துள்ள நிலையில், இதனை ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
திமுகவின் நிலைப்பாட்டுக்குத் தவெக ஐடி விங் பதிலடி:
இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டெல்லி அணியா தமிழ்நாடு அணியா, பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான், பாஜகவுடன் ஒட்டோ உறவோ இல்லை, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதுதான் நமது சுயமரியாதை என்றெல்லாம் ஆட்சியில் இருந்தபோது திமுகவும் அதன் தலைமையும் பேசின. ஆனால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, அதே பாஜகவின் திட்டத்தை வரவேற்றுத் ‘திட்டங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?’ எனக் கூறி திமுக சப்பைக்கட்டு கட்டுகிறது,” என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
மறைமுக உறவில் இருந்து நேரடி உறவு எனக் குற்றச்சாட்டு:
தொடர்ந்து அந்தப் பதிவில், “‘இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல’ எனத் திமுக கூறியிருப்பது தேர்தல் தோல்வியின்போதே எடுக்கப்பட்ட முடிவு என்பதை வெளிப்படுத்துகிறது. ‘We maintain full consistency’ என்று கூறிப் பாஜகவுடன் மறைமுக உறவில் இருந்து இன்று நேரடி உறவுக்கு வந்துள்ளதைத் திமுகவே ஒப்புக்கொண்டுள்ளது. 1999-இல் இருந்தே பாஜகவின் மறைமுகக் கூட்டில்தான் இருந்து வந்துள்ளோம் என்பதுபோல் இரட்டை வேடத்தில் ‘No Deviation and no departure at all’ எனக் கூறுகிறது. அதிமுகவின் ரிங் மாஸ்டராகப் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று பேசிய திமுக தலைமை, தற்போது பாஜகவின் காலடியில் வீழ்ந்து தங்களுக்கும் ரிங் மாஸ்டர் பாஜகதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது,” எனத் தவெக ஐடி விங் குற்றம் சாட்டியுள்ளது.
பெரியார், அண்ணா கொள்கை எங்கே எனக் கேள்வி:
மேலும் அந்தப் பதிவில், “இப்படி அரசியல் சூதாட்டம் ஆடுவதற்குப் பெயர்தான் கொள்கையா? பெரியாரின் சுயமரியாதையும் அறிஞர் அண்ணாவின் திராவிடச் சிந்தனையும் எங்கே போனது? சிறுபான்மை சகோதரர்களும் தமிழக மக்களும் இதனை மன்னிக்க மாட்டார்கள். எப்போதெல்லாம் வாள் மற்றும் கேடயம் எடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தெரியும் எனத் திமுக தலைமை கூறியுள்ளது. தமிழக மற்றும் தென்னிந்திய மக்களின் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக வாளைச் சுழற்றி, தங்கள் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கச் சுயநலக் கேடயத்தை எடுத்துள்ளது. இதற்கான பரிசாக இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவுக்குத் தோல்வி உறுதி,” என்று தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.
#TVK #DMK #DelimitationBill #TVKITWing #TamilNaduPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive