அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயை, மேலும் 90நாட்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2026 மே 27 திகதியிட்ட MOD/LEG/PTA/21/2026 என்ற தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்த ஜனாதிபதி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 9(1)-இன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரினெ சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் சலே பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த முன் அறிவுடன், இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும், பொது அமைதி மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பேலியகொடவில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, ஏற்கனவே சுமார் 80 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த வழக்கில் அவரை 3ஆவது சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடடிவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.