‘புதுமுக நடிகருக்கு ரசிகர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்களா!? என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் எம்முடைய முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் வழங்கினர். இதற்கு நன்றி’ என சிறை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் எல் கே அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு ,எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்து வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களும் பிரபலங்களும் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு விருது அளித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் விக்ரம் பிரபு பேசுகையில், ” ஒரு நடிகரின் மகன்- பேரன் -என்ற அடையாளத்துடன் வளர்ந்தேன். பாடசாலை நாட்களிலேயே சில தருணங்கள் அந்த அடையாளத்தின் காரணமாக தனிமையையும் உணர்ந்திருக்கிறேன். அதன் காரணமாக பல விடயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவிற்கு சென்றபோதுதான் எம்மை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
அதன் பிறகு சென்னைக்கு திரும்பி சினிமாவில் எமக்கான பாதையை உருவாக்க வேண்டும் என தீர்மானித்தேன். எம்முடைய முதல் படம் ‘கும்கி’. பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு அழுத்தமும் வந்தது.
சினிமா என்பது திறமை- நேரம்- அதிர்ஷ்டம் -வாய்ப்பு- ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். இப்படத்தின் வெற்றி எனக்கு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி தொடர்ந்து நல்ல கதைகளை தெரிவு செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படைப்புகளில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே எம்முடைய விருப்பம்” என்றார்.