மின்னணுத் தரவுகளைச் சேமித்து வைக்கும் ‘சட்டப்பூர்வ அணுகல்’ (Lawful access) சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டிருந்த ஓராண்டு கால மெட்டாடேட்டா (Metadata) சேமிப்புக் காலத்தைக் குறைக்க கூட்டாட்சி அரசாங்கம் தற்போது தயாராக இருப்பதாகப் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தின்படி, மின்னணு சேவை வழங்கும் நிறுவனங்கள் (டெலிகாம் மற்றும் இணைய நிறுவனங்கள்) தங்களது வாடிக்கையாளர்களின் இருப்பிடம் மற்றும் தகவல் தொடர்புப் பதிவுகள் போன்ற மெட்டாடேட்டாக்களைச் சேமித்து வைக்க வேண்டும். ஆனால், இதில் குறுஞ்செய்திகளின் உள்ளடக்கங்கள் (Message content) சேமிக்கப்படாது. சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டது.
இருப்பினும், இத்தகைய நடவடிக்கை குற்றச் செயல்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சாதாரண கனடியர்களைக் கூட பரந்த அளவில் கண்காணிக்க வழிவகுக்கும் என்று தனியுரிமை ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்தே அரசாங்கம் தனது நிலையில் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் தொடர்ந்து இருக்கும் வேளையில், இதில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது