நெடுந்தீவு உள்ளிட்ட தீவக மக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய ‘குமுதினி’ படகின் திருத்தப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சனிக்கிழமை (04) அன்று நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“தீவக மக்களுக்குப் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடங்கலற்ற கடல் போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அந்த நோக்கில், திருத்தப் பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடித் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.
குமுதினி படகு மீண்டும் தனது சேவையைத் தொடங்குவது, தீவக மக்களின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் பலனளிக்கும். மக்களின் தேவைகளே எமது முன்னுரிமை; பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம்,” என்று அவர் உறுதியளித்தார்.