சென்னை:
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை:
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் தெரிவித்திருப்பது தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று முழங்கிய முதலமைச்சர் விஜய், கடந்த ஜூலை 31 அன்றே அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட புகாரில் 115 நாட்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதலமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க மறுத்தது ஏன்?:
தொடர்ந்து அந்த அறிக்கையில் அவர், “ஒரு மாவட்ட ஆட்சியரே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் புகார் கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில் கார்த்திகாவைக் கைது செய்ததிலும், பயணத்தின் இடையே இசை மதிவாணனைக் கைது செய்ததிலும், சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்ததிலும் காட்டிய வேகம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீதான புகாரில் எங்கே போனது? தாராபுரத்தில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்தும், நீதிபதி விக்டோரியா கௌரி மீது தவெகவினர் முன்வைத்த கீழ்த்தரமான விமர்சனங்கள் குறித்தும் ஏன் வாய் திறக்கவில்லை?” என்று வினவியுள்ளார்.
உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தல்:
மேலும் சீமான் கூறுகையில், “ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார் எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடிமறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய மகளிர் ஆணையமும் சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் வரை அரசு காத்திருந்தது ஏன்? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
#Seeman #NTK #KallakurichiMLA #ArulVignesh #CMVijay #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive