கனடாவின்மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள கே.ரி குழும நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் (KT Group of Companies) ஏப்ரல் 16 வியாழக்கிழமை அதிகாலை திட்டமிட்ட கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வியாழன் ( ஏப்ரல் 16) நள்ளிரவு சுமார் 12:50 (கனேடிய நேரம்) மணியளவில், அடையாளம் தெரியாத குழுவினர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி டிரெய்லரை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த டிரெய்லர் இரும்பு பூட்டுடன் பாதுகாப்பாக பூட்டப்பட்டிருந்தபோதிலும், குற்றவாளிகள் இரும்பு வெட்டும் இயந்திரத்தை பயன்படுத்தி பூட்டை வெட்டி உடைத்து, டிரெய்லரை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் முழுமையான பாதுகாப்பு சீருடைகளை(சேப்டி யூனிபார்ம்களை) அணிந்து இருந்ததால், இது மிகவும் திட்டமிட்ட முறையில் நடைபெற்ற கொள்ளை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களில், குற்றவாளிகள் தொழில்முறை முறையில் செயல்பட்டது தெளிவாகக் காணப்படுகிறது. அது மாத்திரமன்றி இது முதல் சம்பவம் அல்ல. கடந்த ஆண்டும் இதே இடத்தில் இதே போன்ற கொள்ளை முயற்சி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது நிறுவன உரிமையாளர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சம்பவ இடத்திலேயே குற்றவாளிகளை தடுத்து நிறுத்தியிருந்தார். தற்போது இது இரண்டாவது முயற்சியாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன், வெறும் 12 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட டிரெய்லர் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தேடுதல் பணியில் இணைந்து செயல்பட்டனர். பின்னர், திருடப் பட்ட டிரெய்லர் வோன் நகரின் வுட்பிரிட்ஜ் (Woodbridge) பகுதி வாகனத் தரிப்பிடத்தில் (Parking) மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை முன்னிட்டு, அனைவரும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.