கனடாவில் இன்று ‘பச்சைச் சட்டை தினம்’ (Green Shirt Day) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கனடியர்கள் அனைவரும் தங்களை உடல் உறுப்பு தானம் செய்பவர்களாகப் பதிவு செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் (Humboldt Broncos) பஸ் விபத்தில் உயிரிழந்த அல்பெர்ட்டாவைச் சேர்ந்த இளையோர் ஹாக்கி வீரர் லோகன் பௌலட்டின் நினைவாக இந்தத் தேசியப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
2018 ஏப்ரல் 7 அன்று தனது 21ஆவது வயதில் உயிரிழந்த லோகன், தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விரும்புவதாகத் தனது பெற்றோரிடம் முன்னரே தெரிவித்திருந்தார். அவரது இந்த ஒரு முடிவு, ஆறு பேரின் உயிரைக் காப்பாற்ற உதவியது.
லோகனின் இந்தச் செயலைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களிலேயே சுமார் 1,50,000 கனடியர்கள் உடல் உறுப்பு தானத்திற்காகப் பதிவு செய்துகொண்டனர். இதுவே ‘லோகன் பௌலட் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது.
சஸ்காட்செவனில் உள்ள ஒரு சந்திப்பில் லொறி சாரதி ஒருவர் நிறுத்தல் அடையாளத்தை (Stop sign) மீறிச் சென்றதால், ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்ததோடு, 13 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.