ஒரோரா கொலைச் சம்பவம்: ஆறு பேருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது
ஒரோரா, ஒன்ராறியோ (AURORA, ON) — ஒரோரா (Aurora) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, ஆறு பேருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 10 ஆம் திகதி ஒரோராவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடுமையான காயங்களுடன் இருந்த டேவிட் கோஸ் (David Gosse) என்பவரைக் கண்டறிந்ததாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டமையே (Blunt force trauma) மரணத்திற்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளவர்கள்:
-
ஜேம்ஸ் மொண்ட்கொமரி (44) – அலிஸ்டன் (Alliston) பகுதியைச் சேர்ந்தவர்
-
கிரெய்க் வில்சன் (31) – நிரந்தர முகவரி அற்றவர் (No Fixed Address)
-
ஜேமி வைட் (36) – ஜோர்ஜினா (Georgina) பகுதியைச் சேர்ந்தவர்
-
ஃபேபியோ ஃபகநெல்லோ (58) – ஒரோரா பகுதியைச் சேர்ந்தவர்
-
மரியா ஃபகநெல்லோ (54) – ஒரோரா பகுதியைச் சேர்ந்தவர்
-
பியான்கா ஃபகநெல்லோ (29) – ஒரோரா பகுதியைச் சேர்ந்தவர்
இவர்கள் ஆறு பேரும் தலா ஒரு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சான்றுகளைச் சேகரித்து வருவதுடன், இச்சம்பவத்தைக் நேரில் கண்டவர்கள், இது குறித்து ஏதேனும் விபரங்கள் அறிந்தவர்கள் அல்லது அப்பகுதியின் பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.