ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தற்காப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துள்ளன.
பஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்:
ஆதரவாக: 11 நாடுகள் வாக்களித்தன.
எதிராக (வீட்டோ): ரஷ்யா மற்றும் சீனா.
புறக்கணிப்பு (Abstained): பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா.
பல வாரகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தீர்மானம் பலமுறை மாற்றியமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும்’ (Chapter VII) பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் அது நீக்கப்பட்டு, “அனைத்து தற்காப்பு வழிமுறைகளையும் பயன்படுத்த நாடுகளுக்கு அதிகாரம் அளித்தல்” என மாற்றப்பட்டு, இறுதியில் “தற்காப்பு முயற்சிகளை வலுவாக ஊக்குவித்தல்” என மட்டுப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், ரஷ்யாவும் சீனாவும் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன.
வாக்கெடுப்பிற்கு முன்னதாக உரையாற்றிய டாக்டர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி பின்வருமாறு எச்சரித்தார்:
“ஈரானின் தொடர்ச்சியான விரோதப் போக்கிற்கு இது ஒரு கடுமையான பதிலடியாகும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீரிணையை ஒரு நாடு தனது ஆதாயத்திற்காக ஆயுதமாகப் பயன்படுத்துவதை (Weaponising) பாதுகாப்புச் சபை தடுக்கத் தவறினால், அது உலகிற்குப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது மற்ற நீரிணைகளிலும் தொடர வாய்ப்புள்ளது, இது உலகத்தை ஒரு காடாக மாற்றிவிடும்.”
டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 8:00 PM காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், ஐநாவில் இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ரஷ்யா மற்றும் சீனாவின் இந்த நடவடிக்கை, ஈரான் மீதான இராணுவ அழுத்தத்தை சர்வதேச சட்டரீதியாகக் கொண்டுவருவதை முறியடித்துள்ளது.