திருவண்ணாமலை
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளில் ஒரு துளி கூட உண்மையில்லை என்று அதிமுக கொறடாவும், சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி முறிவுக்கு வேலுமணியே காரணம்:
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசியதற்குப் பதிலளிக்கும் விதமாகத் திருவண்ணாமலை, போளூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவோடு கூட்டணியைத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்தான் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்று உறுதியாகத் தெரிவித்தனர். அதனடிப்படையில் மட்டும்தான் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்ற இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார். மேலும், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து பாஜகவினர் மற்றும் அப்போது மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உள்ளிட்டோர் தவறாகப் பேசியது குறித்துப் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் எடுத்துரைத்தார்.
குறுநில மன்னர்களாகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள்:
அதேபோல், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 21 சட்டமன்றத் தொகுதிகளில் எஸ்.பி.வேலுமணி பரிந்துரை செய்த வேட்பாளர்களையும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு நத்தம் விஸ்வநாதன் பரிந்துரை செய்த வேட்பாளர்களையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி.சண்முகம் பரிந்துரைத்த வேட்பாளர்களை மட்டுமே எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களாக அறிவித்தார். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், குறுநில மன்னர்களாகச் செயல்பட்டதன் காரணத்தால்தான், அவர்களின் பரிந்துரைகளின்படி அவர்கள் அறிமுகப்படுத்தியவர்களையே எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களாக அறிவித்தார். மேலும், அவர் 234 தொகுதிகளில், 196 தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தவெகவின் குதிரை பேரம் & திமுகவுடன் ரகசியப் பேச்சு:
எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் கட்சித் தலைவராக அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்வு செய்த நிலையில், ‘ஏன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது?’ என்ற நிலைப்பாட்டை சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்வைத்தனர். மேலும், திருமாவளவன் முதலமைச்சராவதற்கு நாங்கள் திமுகவோடு பேசிவிட்டோம் என்றும் அவர்கள் கூறினர். சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவின் குதிரை பேரம் மூலம் இழுக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் தாண்டி இந்த மாபெரும் இயக்கத்தைக் கம்பீரமான முறையில் எடப்பாடி பழனிசாமி வழிநடத்திச் செல்கிறார்.
தொடர்ந்து பேட்டியளித்தால் கடும் நடவடிக்கை:
எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பொதுவெளியில் தொடர்ந்து இதுபோன்று பேட்டி கொடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 400-க்கும் மேற்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கியதாகக் கூறுகிறார்கள்; இயக்கத்திற்குத் துரோகம் செய்தவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் புதிய உத்வேகத்தோடும், மிகுந்த ஆர்வத்தோடும் செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஒருவரையும் நீக்கக் கூடாது என்பதற்காக அனைவரையும் அரவணைத்துச் செல்வதாகவும், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் சொல்லக்கூடிய குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மையில்லை” என்று அவர் தெரிவித்தார்.
கட்சியின் நலனுக்காக உறுதியான முடிவு:
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வரவுள்ளது. எப்போது இந்தப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “விரைவில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவரது எண்ணம். கட்சியின் நலனுக்காக அவர் உறுதியான முடிவை எடுப்பார்” என அக்ரி கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.
டிடிவி தினகரனை வேண்டாம் என்றது வேலுமணிதான்:
மேலும் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற இயக்கம் இருக்கிறதா என்பதே நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் டிடிவி தினகரனை வேண்டாம் என்று சொன்னது இதே எஸ்.பி.வேலுமணிதான். எதிர்காலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமையும். திமுகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் கூறவில்லை. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பேசுவது அப்பட்டமான பொய்யாகும். திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக; திமுக ஒரு தீய சக்தி என்பதில் நாங்கள் எப்போதுமே உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
#AgriKrishnamoorthy #AIADMK #SPVelumani #EdappadiPalaniswami #EPS #NathamViswanathan #CVShanmugam #TNPolitics #TamilNaduNews #Tiruvannamalai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates #AIADMKSplit