ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது, அடிப்படை ஊடக ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும்; ஊடகத்துறையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “ஊடகவியலாளர்களின் திறன் விருத்திக்காகக் கடந்த ஆண்டு 104 மில்லியன் ரூபாயும், இவ்வாண்டு 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு 161 பேருக்கு ஊடகத்துறைப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், கலாநிதிப் பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில்களும் இதில் உள்ளடங்குகின்றன.
மேலும், தேசிய ஊடகக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் கொட்டாவையில் 27 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மறுசீரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வருமான இலக்கில் 90 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. கட்டடங்களைப் புனரமைப்பதற்காக 600 மில்லியன் ரூபாயும், விநியோகப் பணிகளுக்காக 180 வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகத் தபால் சேவைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் அதிகூடிய வருமானமாக 1,214.94 மில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளதுடன், 2027ஆம் ஆண்டில் 2,100 மில்லியன் ரூபாய் வருமானத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் (ITN) 13 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025ஆம் ஆண்டில் 35.4 மில்லியன் ரூபாய் நிகர இலாபத்தைப் பெற்றுள்ள நிலையில், அந்த இலாபத்தில் 30 சதவீதத்தைத் திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அரச அச்சகத் திணைக்களம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளையும் மறுசீரமைத்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு, நிதி ஒழுக்கமின்றிச் செயற்பட்ட சில அரச ஊடக நிறுவனங்களை வினைத்திறன் மிக்க நிறுவனங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊடகச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது அடிப்படை ஊடக ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம். ஊடகத்துறையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்றார்.