டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில் டிக்கெட்டுகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கும் ரசிகர்களைக் குறிவைத்து இணையவழி மோசடிப் பேர்வழிகள் (Scammers) தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
39 நாட்கள் நீடிக்கும் இந்த பிரம்மாண்ட கால்பந்து திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான கனடாவின் ஆட்டத்திற்குப் பிறகு, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும், உலகக்கோப்பை நினைவுப் பொருட்களையும் (Merchandise) ஆன்லைனில் வாங்குவதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மோசடி கும்பல்கள் வலைவிரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ரித்தேஷ் கோடக் கூறுகையில், “மோசடி செய்பவர்கள் தற்போது மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். ஃபிபா போட்டிகளில் கலந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுவதால், அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்குவதில் மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
தற்போது அதிகாரப்பூர்வ ஃபிபா (FIFA) இணையதளத்தில் கடைசி நேர டிக்கெட்டுகள் $2,000 முதல் $3,000 டாலர்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இந்தத் தேவையைப் பயன்படுத்தி ரசிகர்களை ஏமாற்ற பல்வேறு வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
முக்கிய உலகக்கோப்பை மோசடிகள் (Top World Cup Scams):
மத்திய-தெற்கு ஒன்டாரியோவின் ‘பெட்டர் பிசினஸ் பீரோ’ (BBB) அமைப்பின் முதன்மை நிர்வாகி ஏஞ்சலா டென்னிஸ் இதுகுறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில், பின்வரும் வழிகளில் மோசடிகள் நடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்:
-
போலி டிக்கெட் இணையதளங்கள்: உண்மையான தளம் போன்றே தோற்றமளிக்கும் போலி முகவரிகள்.
-
போலி தங்குமிடங்கள் மற்றும் ஹோட்டல்கள்: இல்லாத ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வதாகக் கூறி பணம் பறித்தல்.
-
போலி விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள்: சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் (WhatsApp), மின்னஞ்சல் மூலம் உலகக்கோப்பை டிக்கெட்டுகள் அல்லது பகுதி நேர வேலைகள் தருவதாக வரும் போலி லிங்க்குகள் (Links).
-
தேடுபொறி (Search Engine) மோசடிகள்: கூகுள் போன்ற தேடுபொறிகளில் பணத்தைக் கொடுத்து, தங்களின் போலி இணையதளங்களை முதன்மையாகக் காண்பித்து மக்களை நம்ப வைப்பது.
“மோசடி செய்பவர்களின் முக்கிய நோக்கமே உங்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி (Identity Theft) பண மோசடி செய்வதுதான். எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் தேவையற்ற லிங்க்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். டிக்கெட் வாங்கும் முன் அவசரப்படாமல் தீர விசாரித்து வாங்குவது அவசியம்,” என்று ஏஞ்சலா டென்னிஸ் அறிவுறுத்தியுள்ளார்.