2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் கண்டறியப்பட்ட புதிய தகவல்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ‘சனல் 4’ (Channel 4) ஆவணப்படத்தில் தோன்றிய அசாத் மௌலானாவும், சுரேஷ் சலேவும் தங்களது குடும்பத்தினருடன் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அஹுங்கல்லவிலுள்ள ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்பு தற்செயலாக இடம்பெற்றது எனச் சுரேஷ் சலே ஆரம்பத்தில் கூறியபோதிலும், தொலைபேசிப் பதிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
சந்தர்ப்பச் சூழ்நிலைச் சான்றுகள், அசாத் மௌலானா முன்வைத்த சில குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
மேலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான தகவல்களை ‘தம்பி அண்ணா’ என அறியப்பட்ட உளவாளி ஒருவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியிருந்ததாகவும், எனினும் சுரேஷ் சலேவின் அறிவுறுத்தலுடன் குறித்த கோப்பு மறைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இவ்விவகாரத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு இருக்கக்கூடிய தொடர்பு குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்தியக் குழுவினால் தயாரிக்கப்பட்ட 31 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
சுரேஷ் சலே உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தாரே தவிர, உடல் ரீதியான சித்திரவதைகள் குறித்து வைத்தியக் குழுவிடம் எதனையும் வெளிப்படுத்தவில்லை எனத் திலீப பீரிஸ் வாதிட்டார்.
எவ்வாறாயினும், சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பானுக மல்லவாராச்சி, அரச தரப்பின் வியாக்கியானத்தை மறுத்ததுடன், தனது கட்சிக்காரருக்கு இழிவான முறையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான நடத்தைகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வைத்தியக் குழு பரிந்துரைத்துள்ளதையும் பிரதிவாதிகள் தரப்பு சுட்டிக்காட்டியது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இவ்விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தமது அபிப்பிராயத்தின்படி போதிய சான்றுகள் உள்ளதாகவும், எனினும் அவரைக் கைது செய்வது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் விசாரணை அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இவ்வழக்கை 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.