சென்னை:
உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல என்றும், அப்படியே தவறுதலாகப் பேசினாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பில்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத தவெக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துத் தஞ்சையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் என்றும், ஜோக்கர் அமைச்சரவை என்றும் முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாததாலேயே அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக ஸ்டாலின் சாடியுள்ளார்.
காவிரிப் பிரச்சனையில் அரசின் தோல்வியை மறைக்கவும், திசைதிருப்பவுமே எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் அராஜகமாகக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாளை சட்டமன்றம் கூடும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தவெக அரசு செயல்பட்டுள்ளது. ஆனால், மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு, நீதிமன்றத்தில் உதயநிதியை விடுவிப்பதாகக் கூறியுள்ளது தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி என்று விமர்சித்துள்ளார். சில அரசியல் கட்சித் தலைவர்கள் உண்மை என்னவென்று அறியாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது என்றும், அவர் ஆபாசமாக ஏதும் பேசவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய் தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும் என ஸ்டாலின் கடுமையாகக் கிண்டலடித்துள்ளார். மெரினா கடற்கரையைப் பூட்டி வைத்தது, நீட் போராட்டங்களை ஒடுக்கியது என தவெக அரசின் நடவடிக்கைகளைப் பாசிசத்தின் உச்சம் எனக் குறிப்பிட்ட அவர், ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான திமுக தொண்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
#MKStalin #UdhayanidhiStalin #CMVijay #TVKGovt #DMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #CauveryIssue #PoliticalUpdate #TamilNewsLive