கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய பிரபல ஈரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கும், அவரது இசைக்குழு மற்றும் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கும் இரான் அதிகாரிகள் சவுக்கடிகள் வழங்கியுள்ளதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பரஸ்தூ அஹ்மதி, மூன்று இசைக் கலைஞர்கள் மற்றும் ஒரு தயாரிப்பாளர் ஆகியோருக்கு கோம் நகரில் தலா 74 சவுக்கடிகள் வழங்கப்பட்டதாக அவர்களது வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
29 வயதான அஹ்மதி, 2024 டிசம்பரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இசை நிகழ்ச்சியில் கையற்ற உடை அணிந்து பாடியிருந்தார். ஈரானில் பெண்கள் பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஹிஜாப் அணிவதுடன், உடல் அமைப்பு வெளியே தெரியாத வகையில் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அந்நாட்டுச் சட்டங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
இந்த ஆண்டு ஜூன் மாதம், ‘பொது ஒழுக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டது’, ‘ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களை’ வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அஹ்மதிக்கும் மேலும் எட்டு பேருக்கும் கோம் நகர குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்திருந்தனர்.
74 சவுக்கடிகள் வழங்கப்பட்டதுடன், ஒலி-ஒளி ஊடகத் துறையில் செயல்படுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.