பொது வாக்கெடுப்பு என்பது ‘ஆல்பர்ட்டா குடிமக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு தகவல் தொடர்பு செயல்முறை’ என்றும், இது ஒப்பந்த உரிமைகளை (Treaty Rights) ஒரு சிறு அளவுகூட பாதிக்காது என்றும் ஜெப்ரி ராத் (Jeffrey Rath) கூறியுள்ளார்.
ஆல்பர்ட்டா செழுமைத் திட்டத்தின் (Alberta Prosperity Project) வழக்கறிஞரான ஜெப்ரி ராத், ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கை தொடர்பான பொது வாக்கெடுப்பு மனு, பழங்குடியின மக்களின் ஒப்பந்த உரிமைகளை மீறுவதாக முன்வைக்கப்படும் வாதங்களை நிராகரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மேற்கு எட்மண்டனில் நடைபெற்ற ஆல்பர்ட்டா சுதந்திரம் குறித்த உரையாடல் நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார். பொது வாக்கெடுப்பு என்பது மக்கள் தங்கள் கருத்துக்களை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கும் ஒரு ஜனநாயக வழிமுறை மட்டுமே என்றும், அது நடைமுறையில் இருக்கும் எந்தவொரு சட்டபூர்வ ஒப்பந்த உரிமைகளையும் மாற்றியமைக்காது என்றும் அவர் வாதிட்டார்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைத் தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வரும் ‘ஆல்பர்ட்டா செழுமைத் திட்டம்’ (APP) அமைப்பானது, இது தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரி வருகிறது. எனினும், இத்தகைய பிரிவினை முயற்சி இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையே உள்ள வரலாற்று ஒப்பந்தங்களை (Treaties) பாதிக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.