சென்னை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, “ஆபத்பாந்தவனே” என்று ஆளுநரின் காலில் விழ திமுக தயாராகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் விமர்சித்துள்ளது.
ஆளுநருடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதும், மனு அளிக்க வந்த நபரைத் தாக்கிய புகாரில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தார்.
தவெக ஐடி விங் விமர்சனம்:
இந்தச் சந்திப்பைக் கடுமையாக விமர்சித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவைக் கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பு நிரூபிக்கிறது. ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது ‘ஆபத்பாந்தவனே’ என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி நேர்காணல் மற்றும் பாஜக குறித்துக் கருத்து:
தொடர்ந்து அந்தப் பதிவில் தவெக ஐடி விங், “கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜக மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது. பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்குக் கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான். அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளது.
#TVK #DMK #UdhayanidhiStalin #GovernorArlekar #TVKITWing #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive