கொழும்பு மாவட்ட அறநெறி ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது ஞாயிறு அறநெறி பாடசாலை தொடர்பாகவும் அறநெறி பொறுப்பாசிரியர்கள், பொறுப்பாசிரியைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கான அங்கீகாரம், அடையாள அட்டைகள், மாணவர்கள் அறநெறி கல்வியினை தொடர்வதற்கான அடிப்படை வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சீருடை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருந்ததோடு. வெகு விரைவில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மலையக பிரதேசங்களில் உள்ள அறநெறி பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள், அதன் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
அக்கலந்துரையாடலில் புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவலகள் அமைச்சர் மற்றும் இந்து சமய கலாசார திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
கொழும்பு மாவட்ட அறநெறி ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சங்கத்தமிழ் இந்து மன்றத்தின் உறுப்பினர்கள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.