போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரானுடன் (Iran) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை கூறி வரும் நிலையில், அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று ஈரான் இராணுவம் கருத்து தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சொல்ஃபகாரி (Ebrahim Zolfaqari), புதன்கிழமை அன்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் அமெரிக்கத் தலைமைத்துவத்தை கடுமையாகச் சாடினார். “உங்கள் வாக்குறுதிகளின் காலம் முடிந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கட்டளை மையமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் சொல்ஃபகாரி மேலும் கூறுகையில், “உங்கள் உள்நாட்டு மோதல்களின் அளவு, உங்களுக்குள்ளேயே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு எட்டிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
டொனால்ட் ட்ரம்ப், ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் “தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் கூறினார். ஆனால் தெஹ்ரான் இதுவரை பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தவில்லை; இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே செய்திகள் பரிமாறப்பட்டதாகக் கூறியுள்ளது.
“நீங்கள் ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த மூலோபாய சக்தி (Strategic power), இப்போது மூலோபாய தோல்வியாக மாறியுள்ளது” என்று சொல்ஃபகாரி கூறினார். மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தை அமெரிக்கத் தலைவர்கள் தங்கள் மனதிலிருந்து “அழிக்கும்” வரை, எரிசக்தி மற்றும் எண்ணெய் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.