ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘நாங்கள் நட்பு நாடுகளாகக் கருதும் குறிப்பிட்ட சில நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளோம். சீனா, ரஷ்யா, இந்தியா, இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரானின் எதிரி நாடுகள், இந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
நாங்கள் ஒரு போர்ச் சூழலில் இருக்கிறோம். இந்த பிராந்தியம் ஒரு போர் மண்டலமாகவே இருக்கிறது. எனவே, எங்கள் எதிரி நாடுகள் மற்றும் அவர்களின் கூட்டாளி நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதேநேரத்தில், மற்ற நாடுகளுக்கு இந்த நீர்வழிப் பாதை தொடர்ந்து திறந்தே இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.