ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 2:09 மணியளவில் தனது விசாரணை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக CIABOC தெரிவித்தது.
ஆணைக்குழுவின் கூற்றுப்படி, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட போது இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியுடன் இவ்வாணைக் குழுவின் விசாரணை தொடர்பிலுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ‘BIZ Solutions INC’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்கொன்றில் €1,454,651.24 (யூரோ) இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக CIABOC குற்றம் சாட்டுகிறது.
தொகையிலிருந்து US$800,000 (அமெரிக்க டொலர்), சிங்கப்பூர் OCBC வங்கியில் இலங்கை தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ‘Sabre Vision Holdings LTD’ நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நிதிப்பரிமாற்றத்திற்கு ஈடான தொகையாக, 2014 மற்றும் 2015 காலப்பகுதியில் நாமல் ராஜபக்ஷ குறித்த இலங்கை தொழிலதிபரிடமிருந்து பல தடவைகளில் மொத்தம் ரூ. 100 மில்லியனைப் பெற்றுக் கொண்டார் என ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.
குறித்த இலங்கை தொழிலதிபர் வழங்கிய வாக்குமூலம், பிரான்ஸைச் சேர்ந்த எயார்பஸ் (Airbus) அதிகாரிகளால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள், அத்துடன் விசாரணையின் போது திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக CIABOC தெரிவித்துள்ளது.