சுகாதார அமைச்சின் சட்டவிரோதமான மற்றும் தன்னிச்சையான இடமாற்ற தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று (31) காலை 8.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்ததையடுத்து, இலங்கை முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
இடைக்கால நியமனங்கள் மற்றும் கஷ்ட பிரதேச சேவை நிலையங்கள் உள்ளிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியலை, இடமாற்ற சபையின் அங்கீகாரம் இல்லாமலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாகவும் அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எவ்வித அறிவியல் அடிப்படையோ அல்லது பங்குதாரர்களின் உடன்பாடோ இன்றி, கஷ்ட பிரதேச சேவை நிலையங்களின் எண்ணிக்கை 393 இலிருந்து 265 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை கிராமப்புற வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாடுகளை மேலும் மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், கஷ்ட பிரதேச நிலையங்களிலிருந்து இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிக் காலம், முறையான ஆலோசனையின்றி ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்போது அந்தப் பகுதிகளில் பணியாற்றும் வைத்தியர்களுக்கு அநீதியான சூழலை உருவாக்குவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை (Doctor Cadre) கடந்த ஒரு தசாப்த காலமாக புதுப்பிக்கத் தவறியமை, ஏற்கனவே வைத்தியசாலைகளில் கடும் தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதுடன், நோயாளர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பல வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் போதிலும், முகாமைத்துவ சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரமின்றி பெருமளவிலான வைத்தியர்களை “ஆரோக்கிய” (Arogya) திட்டத்திற்கு அமைச்சு நியமித்துள்ளதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தீர்மானங்கள் சுகாதார சேவைகளில் மேலதிக இடையூறுகளையும், நோயாளர்களுக்குப் பெரும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள சங்கம், உடனடியாகத் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.