ட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கோப்பை’ (Mayor’s Cup) கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மைதானமே போர்க்களமாக மாறியது.
ஹட்டன் ‘யங் மேட்ஸ்’ (Young Mates) மற்றும் நோர்வூட் ‘சன்ரைஸ்’ (Sunrise) ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே சனிக்கிழமை (11) அன்று நடைபெற்ற போட்டியின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டி முடிவடைய இன்னும் ஏழு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் இக்கலவரம் தொடங்கியுள்ளது. அந்த நேரத்தில், ஹட்டன் ‘யங் மேட்ஸ்’ அணி மூன்று கோல்களையும், நோர்வூட் ‘சன்ரைஸ்’ அணி ஒரு கோலையும் பெற்றிருந்தன. போட்டியின் பரபரப்பு காரணமாக, மைதானத்தில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களும் உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டதால், நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்த மோதல் குறித்து ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் நிலைமையைச் சுமுகமாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.