கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளை கடத்தி செல்ல முயன்ற இருவர் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். “கிரீன் சேனல்” ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை கடத்தி செல்ல முயன்ற போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய, கதவு மற்றும் ஜன்னல் திரைச்சீலைகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிபவர் மற்றும் 26 வயதுடையவர், ஒரு சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்காக் நகரில் கொள்வனவு செய்து, பின்னர் இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஏர் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான AI-3203 என்ற விமானம் மூலம் வியாழக்கிழமைபுதன்கிழமை (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளை சோதனையிட்ட போது 12 பொதிகளாக சுற்றப்பட்ட 10 கிலோ 476 கிராம் எடையுள்ள “குஷ்” போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.