ஈரான் மீதான போர் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, விமான எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனம் புதிய கூடுதல் கட்டணங்களை (Surcharge) அறிவித்துள்ளதுடன், சில விமான சேவைகளை ஒன்றிணைத்துள்ளது.
வரும் புதன்கிழமைக்குப் பிறகு ‘கம்பேனியன் வவுச்சர்களை’ (Companion vouchers) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு தற்காலிகமாக 60 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
போதிய கேள்வியற்ற (Lower demand) வழித்தடங்களில் விமான சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாதத்தில் 1 சதவீதமும், மே மாதத்தில் 3 சதவீதமும் விமானப் பயணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
விமான இயக்கச் செலவுகளில் எரிபொருளே பிரதான பங்கு வகிக்கிறது. பிப்ரவரி இறுதியில் ஒரு நீண்டதூரப் பயணத்திற்கு (உதாரணமாக வான்கூவர் – ஹாங்காங்) 71,485 டாலராக இருந்த எரிபொருள் செலவு, மார்ச் பாதியில் 110,171 டாலராக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே ஒரு பயணத்திற்கு மட்டும் சுமார் 40,000 டாலர் செலவு கூடியுள்ளது.
விமானங்கள் ஒன்றிணைக்கப்படுவதால், பயணிகள் இனி அதிக கூட்ட நெரிசலான விமானங்களில் பயணிக்க வேண்டியிருக்கும். அத்துடன், நிலைமை சீரடையும் வரை மற்ற விமான நிறுவனங்களும் இத்தகைய கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தலாம் என சுற்றுலாத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் குறித்து வெஸ்ட்ஜெட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.