முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனுவொன்று நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பான விசாரணையை ஜூன் 16 ஆம் திகதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதுவரை மேல் நீதிமன்ற வழக்கில் சாட்சியங்களை முன்னெடுத்துச் செல்லப் போவதில்லை என முறைப்பாட்டாளர் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சாட்சிகளை அழைக்காமல் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரினார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம், வழக்கை ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளை ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது