யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில், வட மாகாண ஆளுநரின் அப்பட்டமான அரசியல் தலையீடு இருப்பதாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 27(2) பிரிவின் கீழ் அவர் நீதி அமைச்சரிடம் அவசரக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற கௌரவ அலெக்ஸ்ராஜா அவர்கள், மே 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் பதுளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவைக் கூட்டணியின் கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகள் மீது வட மாகாண ஆளுநரால் விசாரணைகள் ஏவப்பட்டிருந்தன.
இதற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை (Writ/006/2026 மற்றும் Writ/008/2026) விசாரித்த நீதிபதி, ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். அத்துடன், கிளிநொச்சியில் பணியாற்றியபோதும் ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்திற்கும் அவர் தடை விதித்திருந்தார்.
நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையீடா?
நகர சபை கட்டளைச் சட்டத்தின் 184 ஆவது பிரிவின்படி, உள்ளூராட்சி சபைகள் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் மாகாண உள்ளூராட்சி அமைச்சருக்கே உரியது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த மறுக்கும் தற்போதைய அரசாங்கம், மக்கள் பிரதிநிதி அல்லாத ஆளுநரைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டு உள்ளூராட்சி சபைகளின் செயல்பாடுகளை முடக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிராகத் தீர்ப்பளித்ததால் ஆளுநரும், அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவரும் இணைந்து கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாக யாழ். சட்டத்தரணிகள் சங்கமும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இடமாற்றம் வழங்கப்படுவதற்கு முதல் நாள், பிரதம நீதியரசரால் இந்த வழக்குகளின் ஆவணங்கள் முறைசாரா வழிகளில் கோரப்பட்டதாகவும் நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதி அமைச்சரிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள்:
இந்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை அச்சுறுத்தும் செயல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வரும் கேள்விகளை முன்வைத்துள்ளார்:
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பாக, வட மாகாண ஆளுநர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு தொடர்பு கொண்டு பேசியதானது, நீதியை நிலைநாட்டுவதில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அப்பட்டமான தலையீடு என்பதை நீதி அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா?
ஆம் எனில், நீதியை நிலைநாட்டுவதில் தலையிட்ட ஆளுநருக்கு எதிராக அரசாங்கம் என்ன சட்டப்படியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் உள்ளூராட்சி சபைகளை முடக்க நினைக்கும் பேரினவாத அரசின் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராகவும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கவும் எமது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து குரலெழுப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.