யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளர் விடுதிகள், வெளிநோயாளர் கிளினிக், இதய எக்கோ (Echocardiography) சேவை மற்றும் இதய இரத்த நாளங்களைப் பரிசோதித்து சிகிச்சையளிக்கும் Cardiac Catheterisation Laboratory (Cath Lab) ஆகியவை சிறப்பாக இயங்கி வருகின்றன.கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது.
எனினும், காலத்தின் தேவைக்கேற்ப புதிய Cath Lab மற்றும் நவீன Echo இயந்திரம் ஆகியவை அவசியமாக இருந்தன. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் இவ்விரு நவீன உபகரணங்களும் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, பொறியியல் சேவைகள் மேலதிக செயலாளர் டாக்டர் சலிந்த பண்டார, திட்டமிடல் பிரதி பணிப்பாளர் நாயகம் (DDG Planning) டாக்டர் ஸ்ரீதரன், மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு வடக்கு மாகாண மக்களுக்கு மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கும் உயர்தர சிகிச்சை வழங்கி வருகிறது.
இந்த புதிய Cath Lab மற்றும் நவீன Echo இயந்திரத்தின் மூலம், இருதய நோய்களை மேலும் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிந்து, உயர்தரமான உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்குவதற்கான திறன் மேலும் வலுப்பெறும். இது வடக்கு மக்களுக்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து சிகிச்சை பெற வருவோருக்கும் பெரும் பயனை அளிக்கும்.
கௌரவ சுகாதார அமைச்சர் அவர்கள் இருதய சிகிச்சைப் பிரிவின் சேவைகள் குறித்து விரிவாக அறிந்து கொண்டதுடன், அப்பிரிவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை மனமாரப் பாராட்டினார்