யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு மிக அருகில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரங்கேறிய இத்துணிகரச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், நாவாந்துறை இராணுவ முகாம் அருகே வசிக்கும் இக்குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்த வன்முறைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பழிவாங்கும் நோக்குடன் இன்று அதிகாலை கிளிநொச்சியில் இருந்து ‘பட்டா’ ரக வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பலே, நாவாந்துறையில் உள்ள குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ முகாமிற்கு மிக அருகில் இவ்வாறானதொரு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பாதுகாப்பு நிலைமைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தப்பி ஓடிய வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை யாழ்ப்பாணக் காவற்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.