யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந. வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மாலை பலாலியில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள எஞ்சிய நிலங்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் தளபதியுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
மேலும், வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் (NCC) செயற்பாடுகளை மேம்படுத்துவது குறித்து மாகாண கல்விச் சமூகத்தினருடன் ஆளுநர் அண்மையில் நடத்திய கலந்துரையாடல்களை யாழ்ப்பாண மாவட்டத் தளபதி பாராட்டினார். தேசிய மாணவர் படையணியில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் சிறுவயதிலிருந்தே நற்பழக்கங்கள், ஒழுக்கம் மற்றும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.